இரவுகளில் பொழியும் துயரப்பனி
''இந்த ஆண்டு (2009) ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் சபிக்கப்பட்ட ஒன்றாயிருக்கிறது. எதனாலும் எவராலும் இட்டு நிரப்பப்பட முடியாத இழப்புகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். கனவிலும் அசாத்தியம் என்று எண்ணிய கசப்பான பின்னடைவை தமிழீழ விடுதலைப் போராட்டம் வந்தடைந்திருக்கிறது. உன்னதங்கள் மீதான நம்பிக்கை கொஞ்சம் ஆட்டங்கண்டிருக்கிறது. விடுதலை குறித்த எங்களது கனவை, இலங்கைப் பேரினவாத அரசுடன் இணைந்த பல நாடுகளின் கூட்டுச்சதி உருத்தெரியாமல் சிதறடித்துவிட்டது. கிளறும் இடங்களில் எல்லாம் பிணங்களோ எலும்புக்கூடுகளோ தட்டுப்படும் அளவிற்கு வன்னி ஒரு பெரிய இடுகாடாக மாறிவிட்டிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக வாழ்ந்திருந்த பூர்வீக நிலமாகிய வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு ஏறத்தாழ வதைமுகாம்கள் என்று சொல்லத்தக்க தடுப்புமுகாம்களில் ஆடுமாடுகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். மலம் கழிப்பதற்குக்கூட இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக வரிசையில் காத்து நிற்க வேண்டிய ‘வசதி’களை உள்ளடக்கியதாக அம்முகாம்கள் அமைந்துவிட்டிருக்கின்றன. இந்த இருண்ட காலத்தில் எங்களைப் போன்ற சிலர் வேற்று நிலங்களில் இருந்தபடி கையாலாகாதவர்களாய் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறோம். ‘விதியே விதியே’ என்று புலம்புவதன்றி வேறொன்றறியாதாராகிப் போனோம். வாழ்க்கை நம்புதற்கரிய குரூரத்தோடிருக்கிறது. சகித்தற்கரிய பயங்கரங்களோடிருக்கிறது. எனினும், மீதி நாட்களை வாழ்ந்து தொலைப்பதன்றி வேறு வழியும் தெரிவும் நமக்கு முன் இல்லை. எல்லா இழப்புகளையும் துயரங்களையும் மேவி, வாழ்க்கையின் மீதான பெருங்காதல் நம்மை இயக்குகிறது'' என்று கூறும் தமிழ்நதியின் கவிதைத் தொகுதி.
Main menu
Book Categories
- Politics (1)
