அயல்நாடுகளுக்கு வேலைக்காகப் புலம்பெயர்ந்து செல்லும் போக்கு அதிகரித்துவருகிறது. திரவியம் தேடி வளைகுடா நாடுகளுக்கும், தென்கிழக்காசிய அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களும், பிற மூன்றாம் உலக நாட்டுத் தொழிலாளர்களும் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல. மனிதக் கடத்தலுக்குள்ளாகும் மனிதர்களின் சோகம் நெஞ்சை உலுக்கக்கூடியது. வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் துயரம் கொடூரமானது. புலம்பெயரும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிதான் நவீன நாகரீகங்கள் செழித்துக் கொண்டிருக்கின்றன. அக்கரைப் பச்சைத் தேடி சென்றோரில் பலர் வாழ்வைத் தொலைத்துவிட்டார்கள். கடந்த பத்தாண்டுகளாக தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கப் பணிகளில் ஈடுபட்டுவரும் யோ. திருவள்ளுவர் இந்தக் கொடுமையும் துன்பமும் உழலும் உலகத்தை அறிமுகப்படுத்துகிறார். பல நாடுகளுக்கு ஆய்வுக்காகச் சென்று வந்த அவர், அந்த அனுபவங்களை நூல் வடிவில் தொகுத்துள்ளார். இந்தப் பிரச்சினையின் பல முகங்களையும் சித்தரிக்கும் திருவள்ளுவர், அதற்கானத் தீர்வுகளையும் முன்மொழிகிறார். பெல்ஜியத்தில் உள்ள பன்னாட்டு சமூக சேவை அமைப்பு ஒன்றின் தலைமைப் பொறுப்பில் உள்ள திருவள்ளுவர், தலித் விடுதலை, உலகமயமாதல், பெண் விடுதலை, மதவாதம், பயங்கரவாதம் போன்றவை தொடர்பாக ஆராய்ந்து வருபவர். இது இவரது முதல் நூல்.