சென்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துலகம், கொள்கைப்பிடிப்பு, நிலைப்பாடுகளைக் கொண்டு, 'இவர்தான் அமர்தியா' என்று முத்திரை குத்திவிட முடியாது. இடதுசாரி செயல் வேகத்துடன் மாணவப் பருவத்தில் செயல்பட்ட சென், இறுக்கமான சித்தாந்தங்களிலும் சூத்திரங்களிலும் தன்னை இழந்துவிடாதவர். நல்ல அம்சங்கள் எங்கிருந்தாலும் அவற்றை ஆர்வத்துடன் உள்வாங்கிக் கொள்வார். தோற்றத்தில் முரண்பட்டு, அடிப்படையில் ஒத்திசைவு கொண்டுள்ள அணுகுமுறைகளை அரவணைத்துக் கொள்வார். காழ்ப்புணர்வு கிஞ்சித்தும் இல்லாது வாதிடுவார். திறந்த மனதுடன் விவாதிப்பார். அவர் ஒரு பன்மைத்துவவாதி.